நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு திரும்பி அனுப்பினார்.
இதை அடுத்து இரண்டாவது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். இதனிடையே நீட் தேர்வு விலக்கு குறித்து ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்த நிலையில் மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
அதற்கான விளக்கத்தையும் சட்ட வல்லுநர்களின் துணையுடன் தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அதில் நீட் தேர்வு நடத்துவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


