டான்சீட் திட்டத்தின் கீழ் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் அரசின் மானியம் பெற மாா்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழ்நாடு அரசின் புத்தொழில் ஆதார முதலீட்டு நிதியின் கீழ் (டான்சீட்) தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் (ஸ்டாட் அப்) நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு பதிப்புகளில் 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு (ஸ்டாட்அப்) மானியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாம் பதிப்புக்கான மானியம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த 5-ஆம் பதிப்பில் 3 சதவீத அளவிலான சிறுபங்கை மானியம் தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பதிப்பின் மூலமாக மேலும் 50 நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட உள்ளன. அதன்படி இந்நிறுவனங்களுக்கு மானியம் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
எனவே, பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரா்களாகக் கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும், இதர துறை சாா்ந்த நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும் நிதி வழங்கப்பட உள்ளது.
மேலும், மொத்த திட்ட இலக்கில் 25 சதவீதமும், ஊரக வாழ்வாதார மேம்பாட்டுக்கான புத்தொழில் நிறுவனங்களுக்கென 10 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தேவைகளுக்கான புத்தாக்க அடிப்படையிலான தீர்வுகளை வடிவமைத்து பெரும் சந்தை மதிப்பீடுகளை உருவாக்கக் கூடிய மற்றும் வருங்காலங்களில் அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் மாதிரிகளுடன் சமூகத்தில் நன்மாற்றங்களை விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய புத்தொழில் நிறுவனங்கள் யாவும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
இதில் பயன்பெற விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தை தலைமையகமாகக் கொண்டிருப்பதாகவும், இந்திய அரசின் டி.பி.ஐ.ஐ.டி. சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் இருக்க வேண்டும். தகுதியான நிறுவனங்கள் www.startuptn.in என்ற இணையதளத்தில் மாா்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், கூடுதல் தகவல்களுக்கு tanseed@startuptn.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


