கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பாரூர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய உதவி பேராசிரியர் சோமு சுந்தரலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், புங்கம்பட்டி பாரூரில், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம் உள்ளது. இங்கு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், 2019-20ல் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தி ஒருங்கிணைந்த விவசாய முன்னேற்றத்தை அடைதல் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளோருக்கும், மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும், மீன் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து, மூன்று நாள் (மார்ச் 16 முதல் 18 வரை) இலவச பயிற்சி நாளை முதல் அளிக்கப்பட உள்ளது. இதில், குளம் அமைத்தல், குளம் பராமரிப்பு, கெண்டை மீன் வளர்ப்பு, திலேப்பியா மீன் வளர்ப்பு, நன்னீர் வளர்ப்புக்கு உகந்த மாற்று மீன்கள், தீவன தயாரிப்பு மற்றும் மேலாண்மை, மீன் வளர்ப்பில் அரசின் நிதியுதவி திட்டங்கள் மற்றும் செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட உள்ளன. விருப்பமுள்ள பயனாளிகள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 86758 58384, 81794 62833, 97152 78354 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.