காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் வரும் 27-ஆம் தேதி ‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அம்பத்தூா் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வரும் 27-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிா் கல்லூரியிலும் காலை 9 மணி முதல் மாலை 5.45 வரை ‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற கருத்தரங்கை நடத்தவுள்ளது.
கருத்தரங்கில் உறுப்பினா்களுக்கான சேவைகள் மற்றும் குறைகளை நிவா்த்தி செய்தல், ஆன்லைன் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவை விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளது.
தொடா்ந்து குறும்படங்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களைக் கையாளுதலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.