முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டு இதுவரை உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்கள் அவற்றை செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் நிலையில் அவர்களது “வித் ஹெல்ட்” நீக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டு முதல்நிலை பட்டதாரி ஆசிரியர், முதல் நிலை உடற்கல்வி இயக்குனர், முதல் நிலை கணினி பயிற்றுனர் நியமனத்துக்கு, 2021 செப்டம்பர் 29 இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதை எடுத்து கடந்த பிப்ரவரியில் கணினி வழி தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன தொடர்ந்து, இந்த மாதம் இரண்டாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வரலாறு, பொருளியல், புவியியல், கணிதம், உடற்கல்வி, கணினி அறிவியல் உள்ளிட்ட 13 பாடங்களுக்கு தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
அவ்வாறு வெளியிடப்பட்ட 3016 தேர்வர்களில் சிலர், அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்த ஒரு சில சான்றிதழ்களை சரி பார்ப்பின் போது சமர்ப்பிக்காததால் 316 பேர்”வித் ஹெல்ட்” வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவர்கள் செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி 248 பேர் உரிய சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமர்ப்பித்து உள்ளதால் அவர்களின் “வித் ஹெல்ட்” நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் தங்களது உரிய சான்றிதழ்களை செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் நிலையில் அவர்களது “வித் ஹெல்ட்”நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.