தபால் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2.50 லட்சத்தை மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசிமாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் பட்டமுத்து (23), இவரது நண்பர்கள் மதுரையை சேர்ந்த செல்வக்குமார் மற்றும் அன்பரசன். இவர்கள் பட்டமுத்துவை அணுகி, தபால்துறையில் காலிப்ப ணியிடம் உள்ளது. அதில் வேலை வாங்கித்தருவதாக கூறி, அதற்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவாகும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பிய பட்டமுத்து, முதல் தவணையாக ரூ.2.50 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை.)
இது குறித்து கேட்டபோது, முதலில் இப்பணிக்கான நடத்தப்படும் தேர்வை எழுத வேண்டும் என முன்னுக்குப் பின் முரணாக கூறி உள்ளனர். இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் பட்டமுத்து புகார் கொடுத்தார். போலீசார் செல்வகுமார், அன்பரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.