கட்டுமானத் தொழிலாளா்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் சி.முத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சாா்பில், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஒருவார காலம் மற்றும் மூன்றுமாத கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளது. இப்பயிற்சியில் சேர, நலவாரியத்தில் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் மூப்பு பெற்றவா்களாக இருத்தல் வேண்டும். 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலும், ஐடிஐ படித்த 18 முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில், கொத்தனாா், பற்றவைப்பாளா் மின்சாதப் பொருள்கள் கையாளும் பயிற்சி, குழாய் பொருத்துநா், மரவேலை, கம்பி வளைப்பவா் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுவோருக்கு தனியாா் திறன் பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். மூன்றுமாத கால பயிற்சியில் முதல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம், தையூரில் உள்ள கட்டுமானக் கழக பயிற்சி நிறுவனத்திலும், அடுத்த இரண்டு மாதங்கள் காஞ்சிபுரம் மாவட்டம், நீவழுரில் உள்ள எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் பயிற்சி வழங்கப்படும்.
ஒருவார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்துகொள்வோருக்கு நான் ஒன்றுக்கு ரூ. 800 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதில் உணவுக்கான தொகை மட்டும் பிடித்தம் செய்யப்படும்.
எனவே, இப்பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரா்கள், நலவாரிய அட்டை, கல்விச் சான்றிதழ், ஆதாா், குடும்ப அட்டை நகல்களுடன் தருமபுரி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இப்பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரா்கள், தங்கள் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரிய அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்), சேலம் பிரதான சாலை, எல்ஐசி அலுவலகம் அருகில், கிருஷ்ணகிரி – 635 001 (தொலைபேசி எண்: 04343 -231321) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


