TNPSC group 4 VAO exam How to answer 180 questions: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வி.ஏ.ஓ தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க எப்படி படிக்கலாம் என்பதற்கு டிப்ஸ் இங்கே
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் இந்த தேர்வை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே போதும். இதனால், குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். எனவே, போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.
அடுத்தப்படியாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
முதல் பகுதியான தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. அதாவது 50% மதிப்பெண்கள் இந்தப் பகுதியிலிருந்து நமக்கு கிடைத்து விடும். எனவே இதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். குறிப்பாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளியுங்கள். இவ்விரு புத்தகங்களில் இருந்து அதிகப்படியான வினாக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. அடுத்தப்படியாக 6,7,8 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ளுங்கள். சுமார் 10 வினாக்கள் 6-10 ஆம் வகுப்பு புத்தகங்களை தாண்டி வெளியில் கேட்கப்படலாம். இதற்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை படித்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படிக்க தேவையில்லை. சிலபஸூக்கு ஏற்ற பகுதிகளை மட்டும் படித்துக் கொள்ளுங்கள். இருப்பினும், பெரும்பாலும் 90 -95 வினாக்கள் 6-10 ஆம் வகுப்பு புத்தகங்களுக்குள் இருந்துதான் கேட்கப்படுகிறது. எனவே அதனை முழுமையாக படித்தாலே நாம் 95 வினாக்கள் வரை சரியாக விடையளித்து விடலாம்.
தமிழுக்கு அடுத்தப்படியாக நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கணித பகுதி வினாக்கள். இதில் நாம் நன்றாக பயிற்சி செய்தால் 25 வினாக்களில் 23-25 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம். இதில் விகிதம், இலாபம்-நட்டம், அளவீடுகள், சதவீதம், வட்டி கணக்குகள், இயற்கணிதம் போன்ற பகுதிகளில் இருந்து தான் அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதற்கு 6-10 வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை படித்தாலே 25 வினாக்களுக்கும் விடையளிக்கலாம். ஆனால், பள்ளி பாட புத்தகத்தில் உள்ள வினாக்களை தவிர, கூடுதலாக பயிற்சி செய்துக் கொள்வது நல்லது.
தமிழ் மற்றும் கணித பகுதியை நமக்கு அதிக மதிப்பெண்களை பெற்றுத் தரக்கூடியவை என்பதால், இவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுங்கள். இவற்றில் மொத்தமாக 125 வினாக்களில் 115 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்கும் வகையில் தயாராகிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். இதில் 60-65 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கும் வகையில் தயாராகிக் கொள்ளுங்கள். இதில் அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம், புவியியல், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அதேநேரம் புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்தும் அதிக வினாக்கள் கேட்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் தேர்வாணையம் வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாளில் இந்த இரு யூனிட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு என்ன படிப்பது? எப்படி படிப்பது?
குரூப் 4 தேர்வுக்கு தயாராக நினைப்பவர்கள் முதலில், புத்தகங்களை சேகரியுங்கள். பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள்.
தமிழ் மொழிப்பாடத்திற்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்துக் கொள்ளுங்கள். முதலில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ் புத்தகங்களையும், தேவைப்பட்டால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களையும் படித்து முடித்து விடுங்கள். பின்னர் 6,7,8 தமிழ் புத்தகங்களை படித்துக் கொள்ளுங்கள். இதில், செய்யுள், உரைநடை, இலக்கணம் என அனைத்து பிரிவுகளையும் தொடர்ச்சியாக படியுங்கள். முடிந்தவரை செய்யுள் தனியாக, உரைநடை தனியாக, இலக்கணம் தனியாக படிப்பதை தவிருங்கள். ஏனெனில் நீங்கள் பாடப்புத்தகங்களை திருப்பி படிக்கும்போது, தனித்தனியாக படிக்க சிரமமாக இருக்கலாம். மேலும் அந்தந்த பாடங்களுக்கு உரிய இலக்கணப்பகுதிகளை அதோடு, சேர்த்து படித்தால் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். செய்யுள் பகுதியை படிக்கும்போது, பாடல்களை ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். பின்னர் பாடலின் அர்த்தத்தைப் படித்து தெளிவுபெறுங்கள். கூடவே அந்த பாடலுக்கான இலக்கணப் பகுதியையும் சேர்த்து படித்துக் கொள்ளுங்கள். செய்யுள் படிக்கும்போது, நூற்குறிப்பு, நூலாசிரியர் குறிப்பு, நூலாசிரியர் எழுதிய பிற நூல்கள், காலம் போன்ற அனைத்து தகவல்களையும் படித்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக கணித பாடங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தலைப்பின் கீழ் வரும் வினாக்களை ஒவ்வொரு நாளாக பயிற்சி செய்து வாருங்கள். கணித பகுதிக்கு ஷார்ட் கட் வைத்து படிப்பது நல்லது. ஆனால், வினாக்களை படிக்காமல், பயிற்சி செய்து பார்ப்பது அவசியம். தமிழ் மற்றும் கணித பகுதிக்கு முக்கியமாக முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக, பொது அறிவுப் பகுதியில் 10 கேள்விகள் வரை பள்ளி புத்தகங்களை தாண்டி வெளியில் இருந்து கேட்கப்படலாம். ஆனால் அவை பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த வினாக்களாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் மீதமுள்ள 65க்கும் மேற்பட்ட கேள்விகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து தான் நிச்சயம் வரும். எனவே பள்ளி பாடப்புத்தகங்களை முழுமையாக படித்தாலே 75 வினாக்களில் 65 வினாக்களுக்கு சரியாக பதிலளிக்கலாம். பொது அறிவு பகுதியை பொறுத்தவரை, அறிவியல், வரலாறு, புவியியல், அரசியலமைப்பு உள்ளிட்ட பாடங்களுக்கு பாடப்புத்தகத்தை படிக்கும் போது, பெட்டிச் செய்தி, அடைப்புகுறிக்குள் உள்ள தகவல்கள், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்களை முக்கியமாக படிக்க வேண்டும். மிக முக்கியமாக பாடங்கள் முடிவில் உள்ள (புக் பேக் கொஸ்டின்) வினாக்களை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
புவியியல் படிக்கும்போது இந்திய வரைபடத்துடன் இடங்களை பொருத்தி படித்துக் கொண்டால், உங்களுக்கு எப்போதும் மறக்காது. அரசியலமைப்பில், பகுதிகள், அட்டவணைகள், ஆர்டிக்கிள், சட்டத்திருத்தம் ஆகியவற்றில் முக்கியமானவற்றை வரிசையாக படித்து வைத்துக் கொள்ளுங்கள். முன்னதாக ஆங்கிலேயர் கால சட்டங்கள், அரசியலமைப்பு உருவானவிதம் ஆகியவற்றை படித்து தெளிவு பெற்றுங்கள்.
அடுத்தப்படியாக நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படியுங்கள். செய்தித்தாள்களை படிக்கும்போது தேவையற்ற செய்திகளை படிக்காமல், சிலபஸூக்கு ஏற்றவாறு படியுங்கள்.
குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் பள்ளி பாடப் புத்தகங்களை ஒட்டியே உள்ளதால், பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்து பயிற்சி பெற்றாலே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.
Tamilnadu 6th to 12th std New Books All Subjects Free Download Online
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


