தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துவிட்டது. மேலும், சீர் திருத்தம் என்ற பெயரில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அடுத்த மாதம் முதல் ‘நிதி சுமை’ கூடுதலாக இருக்கும். மாத ‘பட்ஜெட்’ மூலம் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு அதிகளவில் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையை, மின் கட்டண உயர்வு உருவாக்கிவிட்டது.
பழைய கட்டணம்: “ஒரு யூனிட்-க்கு” 1–200 யூனிட் விதியில் 101-200 யூனிட் வரை ரூ.1.50, 201 – 500 யூனிட் விதியில் 101 – 200 வரை ரூ.2, 201-500 யூனிட் வரை ரூ.3 மற்றும் 500 யூனிட் கடந்துவிட்டால், 101 – 200 வரை ரூ.3, 201 – 500 வரை ரூ.4.60, 501 யூனிட் முதல் 6.60 என வசூலிக்கப்பட்டது. அனைத்து விதிகளிலும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
மேலும், 200 யூனிட் வரை ரூ.20, 500 யூனிட் வரை ரூ.30, 500 யூனிட்-க்கு மேல் ரூ.40 என நுகர்வோரிடம் இருந்து சேவை கட்டணம் பெறப்பட்டது.
புதிய கட்டணம்: இந்நிலையில் புதிய கட்டண உயர்வில், அதிகபட்சமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.11 வரை நிர்ணயித்துள்ளனர். “ஒரு யூனிட்-க்கு“ 1 – 500 யூனிட் விதியில் 101 – 200 யூனிட் வரை ரூ.2.25, 201 – 400 வரை ரூ.4.50, 401 – 500 வரை ரூ.6 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு யூனிட்-க்கு 501 – 1,000 யூனிட் விதியில் 101 – 400 யூனிட் வரை ரூ.4.50, 401 – 500 யூனிட் வரை ரூ.6, 501 – 600 யூனிட் வரை ரூ.8, 601 – 800 யூனிட் வரை ரூ.9, 801 – 1,000 யூனிட் வரை ரூ.10 என நிர்ணயம் செய்துள்ளனர். மேலும், 1,001 யூனிட் முதல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என கட்டணம் செலுத்த வேண்டும். அனைத்து விதிகளில் 100 யூனிட் வரை இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
பழைய கட்டண முறையில் 500 யூனிட் வரை பயன்படுத்தியவர்கள் ரூ.1,130 என மின் கட்டணம் செலுத்தி வந்தனர். புதிய கட்டண உயர்வால் ரூ.1,755 என கட்டணம் செலுத்த வேண்டும். இது ரூ.625 கூடுதலாகும்.
அதிர்ச்சி தரும் “1–D” விதி: இது ஒருபுறம் இருக்க, சீர் திருத்தம் என்ற பெயரில் வாடகை வீடு மற்றும் அறை (ரூம்) எடுத்து வசிப்பவர்களை மிக கடுமையாக பாதிக்கும் “1 – D” என்ற வதி அமல்படுத்தப் பட்டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு குடியிருப்பில் 5-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும்.
இதேபோல், நகர மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் ஒரே குடியிருப்பில் 3-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர் கள் அனைவரும் ஆழ்துளை மூலம் தண்ணீரை இரைத்து பயன்படுத்துகின்றனர். இதற்காக, கூடுதலாக ஒரு மின் இணைப்பு பெற்றுள்ளனர். இதுபோன்ற இணைப்புகளை “1 – D” என்ற விதியின் கீழ் மாற்றும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
இந்த விதியானது, நுகர்வோரின் தலையில் இடியாக விழுந்துள்ளது.
இந்த விதியில்1 யூனிட்-க்கு ரூ.8 மற்றும் ஒரு கிலோ வாட்ஸ்-க்கு வாடகை ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 2 கிலோ வாட்ஸ் என குறிப்பிட்டு மின் இணைப்பு பெற்றுள்ளனர். இதனால் 100 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.2,800 வரை கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத் தொகை, வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் பகிர்ந்து பெறப்படும்.
ஒரு குடும்பத்தினர் சராசரியாக குடிநீருக்காக ரூ.500 முதல் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், சமையலறை இல்லை என்றால், ‘அறை’ (ரூம்) எடுத்து தங்கி பணியாற்றுபவர்களுக்கும் “1 – D” என்ற விதியே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை வாடகையை விட இரு மடங்கு கூடுதலாக உள்ளன.
பரிசீலனை செய்ய கோரிக்கை: புதிய மின் கட்டணம் குறித்த விவரங்கள், மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. “1 – D” விதிக்கு மாற்றம் என்று மட்டும், ஊழியர்கள் மூலம் படிவம் கொடுக்கப்பட்டு, நுகர்வோரிடம் கையொப்பம் பெறப்படுகிறது. “1 – D” என்ற விதியின் மூலம் மின் கட்டணம் விவரத்தை தெரிவிப்பதில்லை.
இது குறித்து கேள்வி எழுப்பினால், மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துவிட்டு செல்கின்றனர். புதிய மின் கட்டணம் மற்றும் சீர் திருத்த நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள “1 – D” விதிப்படியான கட்டணம் குறித்து, அடுத்த மாதம் மின் அளவீட்டின் போது தெரியவரும்.
அப்போது, தமிழக மக்களின் மன குமுறல் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும் என தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே, இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.