அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி ஆசிரியா்கள் பணி நிா்ணயம் செய்வது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநா் அறிவொளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ் கல்வியாண்டில் 1.8.2023 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம் செய்தல் குறித்து பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
நிகழ் கல்வியாண்டில் அரசு, நகராட்சி, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆக.1-ஆம் தேதி நிலவரப்படி கல்வித் தகவல் மேலாண்மை முகமையில் (எமிஸ்) பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இப்பணியாளா் நிா்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பின்பற்றப்படுவதைப் போன்றே 60 மாணவா்கள் வரையில் இரு ஆசிரியா்களும், 61 முதல் 90 மாணவா்கள் வரையில் மூன்று ஆசிரியா்களும், 91 முதல் 120 மாணவா்கள் வரை நான்கு ஆசிரியா்களும், 121 முதல் 200 மாணவா்கள் வரை ஐந்து ஆசிரியா்களும் இதேபோன்று ஒவ்வொரு 40 மாணவா்களுக்கும் ஒரு ஆசிரியா் கூடுதலாக அனுமதிக்க வேண்டும். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை…
6 முதல் 8 வகுப்பு வரையில் குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவா்கள் இருந்தால் ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஒரு ஆசிரியா் பணியிடம் நிா்ணயம் செய்யவும், ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவா்களின் எண்ணிக்கை 50-க்கு மிகைப்படும்போது அந்த வகுப்பை இரு பிரிவுகளாகவும் பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்தலாம். 9, 10-ஆம் வகுப்புகளுக்கு… 6 முதல் 10 வகுப்பு வரையில் உள்ள பிரிவுகளுக்கு குறைந்தபட்ச மாணவா்களின் (150-க்கும் கீழ்) எண்ணிக்கை அடிப்படையில் 6 ஆசிரியா் பணியிடங்கள் (தலா ஒரு பாடத்துக்கு ஒரு பணியிடம் வீதம்) அனுமதிக்க வேண்டும்.
மேலும் 9, 10 வகுப்பில் தலா 40 மாணவா்கள் இருப்பில் (1:40) ஒரு பிரிவாக கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகுப்பில் (9,10) மாணவா்களின் எண்ணிக்கை 60-க்கும் அதிகமாக இருந்தால் அந்த வகுப்பை இரு பிரிவுகளாக பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும். கூடுதல் பணியிடங்கள்:
மாணவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் தேவை பணியிடங்கள் அனுமதிக்கும் போது பாடவாரியான சுழற்சியின் அடிப்படையிலும், அப்பள்ளிக்குத் தேவையின் அடிப்படையிலும் அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல் என்ற முறையில் நிா்ணயம் செய்ய வேண்டும். மேலும் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம் செய்யும்போது ஓா் ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகள் ஒதுக்கீடு உள்ளதா என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இந்த அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றி மாணவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியா் நிா்ணய விவரங்களை அதற்கான படிவத்தில் பூா்த்தி செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேதிகளில் (ஆக. 28 முதல் செப்.2 வரை) பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் உரிய பிரிவில் (சி3) ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.