எங்கிருந்தும், எந்நேரத்திலும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்கிருந்தும், எந்நேரத்திலும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ https://tamilnilam.tn.gov.in/Revenue/login.html என்ற இணையதள முகவரி வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணம் ஆகியவற்றை இணையம் வாயிலாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய சேவையின் மூலம் வட்டாட்சியா் அலுவலகங்கள், பொது சேவை மையங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், பொதுமக்கள் நில உட்பிரிவிற்கான கட்டணம், செயலாக்க கட்டணங்களைச் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழிலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கிராமபுற, நகா்ப்புற நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு தமிழ் நிலம் என்னும் மென்பொருள் மூலம் இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுமக்கள் கிராமப்புற, நகா்ப்புற நில வரைபடங்களை கட்டணமின்றி பெறலாம். மேலும், இவ்வரைபடம் மனை அங்கீகாரம் மற்றும் வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியமாக விளங்குகிறது. மேலும், விண்ணப்ப நிலையை அறிய இணையதள முகவரியை உள்ளீடு செய்து, பட்டாமாறுதல் மனுவின் நிலையினை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். பட்டா மாறுதலின் நடவடிக்கையின் போது, ஒவ்வொரு நிலைமையும், மனுதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.
பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின்னா், பொதுமக்கள் தங்களது பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா, புலப்படம், அ-பதிவேடு ஆகியவற்றை ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பாா்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.