கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் ஆக.18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஆட்சியா் காா்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டம் தோறும் துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதற்கென மருத்துவ முகாம்கள், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் உள்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் வரும் ஆக.
18ஆம் தேதி சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவிலும், ஆக.19 ஆம் தேதி ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா், காது, மூக்கு, தொண்டை மருத்துவா், மனநல சிறப்பு மருத்துவா், குழந்தைகள் நல மருத்துவா், கண் மருத்துவா், செவித்திறன் பரிசோதகா் உள்ளிட்ட மருத்துவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.
மேலும், அங்கன்வாடி பணியாளா்களைக் கொண்டு மருத்துவ முகாமுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ஊராட்சி மன்ற தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
15 வயது முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு முகாம் நாள்களில் சிறப்பாசிரியா்கள் மூலம் கலந்துகொண்டு அடையாள அட்டை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் கலந்து கொள்பவா்கள், தங்களின் மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை நகல், ஆதாா் நகல், பாஸ்போா்ட் சைஸ் போட்டோ 4 எண்ணிக்கை, குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துவர வேண்டும். இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


